பெரம்பலூரில் சந்தைகள்- காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


பெரம்பலூரில் சந்தைகள்- காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Sept 2020 5:18 AM IST (Updated: 17 Sept 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உழவர் சந்தை, வாரச்சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பான முறையில் இயங்கி வந்தது. பெரம்பலூர் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யும் காய்கறிகள், கனிகள் மற்றும் கீரை வகைகளை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இதேபோல தினசரி காய்கறி மார்க்கெட் தாலுகா அலுவலக சாலையில் உள்ளது. இங்கு தினமும் 160-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து, தாங்கள் மொத்த கொள்முதல் செய்து எடுத்து வரும் காய்கறிகளை விற்று அன்றாடம் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

உழவர் சந்தை அருகே செவ்வாய்க்கிழமை தோறும் செயல்பட்டு வந்த வாரச்சந்தையில் ஆங்கில காய்கறிகள், கீரைகள், உப்பு கருவாடு, பூண்டு மற்றும் நறுமணப்பொருட்கள் விற்பனை நடைபெற்றன. பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் வீட்டு சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும வாங்கி செல்ல வசதியாக இருந்து வந்தது.

ஒரே இடத்தில்...

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு காரணமாக இருப்பதாக கூறி உழவர்சந்தை, வார சந்தை, காய்கறி மார்க்கெட் ஆகியவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி நிர்வாகம் மூலம் காலவரையறை இன்றி மூடப்பட்டன. இதனால் பெரம்பலூர் நகர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒரே இடத்தில் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கனிகள் மற்றும் பல வகை கீரைகள் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அவர்கள் வேறு இடங்களுக்கு சென்று அவற்றை வாங்க வேண்டியது உள்ளது. இதனால் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் தங்களது விளைபொருட்களை தினந்தோறும் விற்க முடியவில்லை. இதனால் அவைதேங்கும் நிலை உருவாகி வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் தாங்கள் விரும்பும் அனைத்து காய்கறியும் ஒரே இடத்தில் மலிவான விலையில் வாங்க முடியவில்லை.

மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தல்

இதற்கிடையே தமிழக அரசு கடந்த 1-ந் தேதி முதல் பொது போக்குவரத்தை அனுமதித்துள்ளது. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள், இறைச்சிக்கூடங்கள், மீன்கள் விற்பனையகம் மற்றும் இதர இறைச்சிக்கடைகள், எந்த நிபந்தனைகளும் இன்றி திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தையை சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கட்டாயம் முக கவசம் அணிதல் போன்ற சில கட்டுப்பாடுகளை பொதுமக்களுக்கு விதித்தும், வியாபாரிகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தும் திறந்திட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story