பூதப்பாண்டி அருகே துணிகரம் ஒரே நாளில் 3 கோவில்கள், கடையில் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


பூதப்பாண்டி அருகே துணிகரம் ஒரே நாளில் 3 கோவில்கள், கடையில் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 20 Sep 2020 2:44 AM GMT (Updated: 20 Sep 2020 2:44 AM GMT)

பூதப்பாண்டி அருகே ஒரே நாளில் 3 கோவில்கள், கடையில் மர்ம நபர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தியில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் பராமரித்து வருகிறார். இங்கு மாலை வேளையில் பூஜைகள் நடைபெறும். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்லத்துரைக்கு தகவல் கொடுத்தார். செல்லத்துரை விரைந்து சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார மக்கள் அங்கு கூடினர்.

மேலும் 2 கோவில்கள்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சற்று தொலைவில் உள்ள முத்தாரம்மன் மன்னர் ராஜா கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்க பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுபோல் முடங்கன்விளை பகுதியில் உள்ள சாஸ்தான் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கடையில் கொள்ளை

கடுக்கரை அருகே திடல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் என்ற ராஜா (வயது 36). கடுக்கரை விலக்கு பகுதியில் பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கடையை திறந்து பார்த்த போது மேஜையில் இருந்த ரூ.38 ஆயிரத்தை காணவில்லை. கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இரவில் மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்தும் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த துணிகர கொள்ளை சம்பவங்களில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.ஒரே நாளில் 3 கோவில், கடையில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story