ஜப்பானில் மர்மமான முறையில் இறந்த நெல்லை என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம்


ஜப்பானில் மர்மமான முறையில் இறந்த நெல்லை என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம்
x
தினத்தந்தி 23 Sep 2020 3:27 AM GMT (Updated: 23 Sep 2020 3:27 AM GMT)

ஜப்பானில் மர்மமான முறையில் இறந்த நெல்லை என்ஜினீயர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள ஆனிகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 56) விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (52). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உண்டு. இவர்களில் கடைசி மகன் மாதவன் (23). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாதவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அவரது வீட்டிற்கு போன் வந்தது. அதில் மாதவன் திடீரென இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதுகுறித்து மாதவன் குடும்பத்தினர் நெல்லை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், மாதவன் இறப்பு குறித்த காரணம் தெரிய வேண்டும், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. நேரில் வலியுறுத்தினார்.

உடல் கொண்டு வரப்பட்டது

தொடர்ந்து இந்திய தூதரகம் மூலம் மாதவன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். கடந்த 20-ந் தேதி ஜப்பானில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் மாதவன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் உடல் சென்னைக்கு வந்தது. அங்கு மாதவனுடைய உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

காலை 11 மணிக்கு மாதவன் உடல் ஆனிகுளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அரசியல் கட்சியினர்

பின்னர் மாதவன் உடலுக்கு அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அவருடன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் டபிள்யூ ராஜசிங், செல்லபாண்டியன், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், துணை தலைவர் நிக்சன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாதவன் உடல் அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

Next Story