கீரமங்கலத்தில், இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் - இரும்பு குழாய்களால் முட்டுக் கொடுத்துள்ள அவலம்


கீரமங்கலத்தில், இடிந்து விழும் நிலையில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் - இரும்பு குழாய்களால் முட்டுக் கொடுத்துள்ள அவலம்
x
தினத்தந்தி 23 Sept 2020 4:15 PM IST (Updated: 23 Sept 2020 4:11 PM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடம் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடைந்த பகுதிகளில் இரும்பு குழாய்கள் வைத்து முட்டுக் கொடுத்துள்ளனர்.

கீரமங்கலம்,

கீரமங்கலத்தில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு கீரமங்கலம், செரியலூர், பனங்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டு சுமார் 2 ஆயிரத்து 500 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமாக செயல்பட்டு வருகிறது.

1960-ம் ஆண்டு முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படுவதுடன் உணவுப் பொருட்களும் பல அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விவசாயத்திற்காக நகை கடன் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் மரச்சட்டங்களின் துணையோடு காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையை தாங்கும் இந்த மரச்சட்டங்கள் கடந்த சில வருடங்களாக உடைந்து காங்கிரீட் இடிந்து கொட்டும் நிலையில் உள்ளது. அதனால் தற்காலிகமாக பாதுகாப்பிற்காக இரும்பு குழாய்களை நிறுத்தி மரச்சட்டங்களில் முட்டுக் கொடுத்து கட்டிடத்தை பாதுகாத்து வருகின்றனர். ஆனாலும் மழை காலங்களில் மேலே தண்ணீர் தேங்கி காங்கிரீட் எடை அதிகரிக்கும் போது கட்டிடம் உடைந்து கொட்டும் அவல நிலையில் உள்ளது.

அதே போல அருகில் உள்ள உரம், மருந்து பொருட்களை சேமித்து வைக்கும் பாதுகாப்பு குடோனின் மேற்கூரையும் சேதமடைந்து மழை தண்ணீர் உள்ளே கொட்டி உர மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது. இதனால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் அச்சத்துடன் பணி செய்வதுடன், உரமூட்டைகள் மழையால் சேதமடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. எனவே கீரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அலுவலக கட்டிடம் மற்றும் குடோன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சங்க உறுப்பினர்கள்.

Next Story