கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம் - பெரிய கோவிலில் சிவனிடம் விண்ணப்பம் கொடுக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு


கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம் - பெரிய கோவிலில் சிவனிடம் விண்ணப்பம் கொடுக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 3:15 PM GMT (Updated: 23 Sep 2020 4:12 PM GMT)

தஞ்சையில் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து சிவனிடம் விண்ணப்பம் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் பெரியகோவிலுக்கு வந்தனர். விண்ணப்பம் கொடுக் அனுமதி மறுத்ததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை வடவாறு அருகே ஆதிமாரியம்மன்கோவில் அமைந்திருந்தது. இந்த கோவில் நீர்நிலையில் கட்டப்பட்டு இருந்ததால் கோர்ட்டு உத்தரவு படி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கோவிலின் முன்பு இருந்த மிகப்பெரிய லிங்கமும் இடிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர், கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாரிடம் (சிவன்) விண்ணப்பம் கொடுத்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் பழ.சந்தோஷ்குமார் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் சதீஷ்கண்ணா, மண்டல செயலாளர் ஆனந்தன், தொழிலாளர் அணி மாநில அமைப்பாளர் பார்கவிராஜன் மற்றும் நிர்வாகிகள் பெரியகோவிலுக்கு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி, டேவிட் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் கோவிலுக்குள் போராட்டம் நடத்த செல்லக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பெரியகோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், கோர்ட்டு உத்தரவுபடி ஆதிமாரியம்மன்கோவிலை இடிப்பதில் ஆர்வம் காட்டிய மாவட்ட நிர்வாகம், கோர்ட்டு உத்தரவு படி பள்ளிவாசல்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story