காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 107 ஏரிகள் சீரமைப்பு - பரந்தூர் பெரிய ஏரியில் நடைபெறும் பணிகளை கலெக்டர் ஆய்வு
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த குடிமராமத்து திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 107 ஏரிகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. தற்போது பரந்தூர் பெரிய ஏரியில் நடைபெறும் பணிகளை கலெக்டர் பி.பொன்னையா ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,
தமிழகத்தில் புதர் மண்டி வறண்டு கிடந்த நீர்நிலைகளை தூர்வாரி மீட்டெடுத்து புத்துயிர் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் இஸா ஏரியில் விவசாயிகள் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் 42 ஏரிகள் தூர்வாரப்பட்டன. 2-வது கட்டமாக 2017-18-ம் ஆண்டில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 27 ஏரிகளும், 2 பெரிய வாய்க்கால்களும் சீரமைக்கப்பட்டன. 3-வது கட்டமாக 2019-20-ம் ஆண்டில் ரூ.15 கோடியே 22 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 38 ஏரிகள் தூர்வாரப்பட்டன.
அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.25 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 107 ஏரிகள், 2 பெரிய வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 17 ஆயிரத்து 805.70 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 4-வது கட்டமாக 29 ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்காக தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி அன்று ரூ.17 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏரிகளின் கரை பலப்படுத்தும் பணிகள், மதகு மறுசீரமைத்தல், நீர் உள்வாங்கியை மறு சீரமைத்தல் மற்றும் வரவுக்கால்வாயை தூர்வாருதல் ஆகிய பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இப்பணிகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் இந்த ஏரிகள் மூலம் 5 ஆயிரத்து 908.12 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பெரிய ஏரி, பரந்தூர் புதுத்தாங்கல் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் பி.பொன்னையா நேற்று நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் வட்டாட்சியர் பவானி, உதவி செயற்பொறியாளர் க.விஜயகுமார், உதவி பொறியாளர் எஸ்.பாஸ்கரன், இளம்பொறியாளர் சி.மார்கண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story