சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கு, குடிநீர் தொட்டி இயக்குபவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கு, குடிநீர் தொட்டி இயக்குபவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2020 1:30 PM GMT (Updated: 25 Sep 2020 1:17 PM GMT)

சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கு குடிநீர் தொட்டி இயக்குபவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வட்டத்தூரை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன் (வயது 25). இவர் அதே ஊராட்சியில் பகுதி நேர குடிநீர் தொட்டி இயக்குபவராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் மாதந்தோறும் சம்பளமாக ரூ.550 பெற்று வந்தார். இதற்கிடையே தமிழக அரசு பகுதி நேர குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டது.

ஆனால் மணிகண்டனுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிசாமியை (47) சந்தித்து, தனக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், ஏற்கனவே வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுங்கள் என கூறினார்.

அதற்கு பழனிசாமி, சம்பளத்தை உயர்த்தி, நிலுவைத்தொகை வழங்க வேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என கூறியதாக தெரிகிறது. அப்போது மணிகண்டன், தன்னால் ரூ.50 ஆயிரம் கொடுக்க இயலாது என கூறியுள்ளார். உடனே பழனிசாமி, முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் கொடுக்குமாறும், நிலுவை தொகை வந்ததும் மீதி தொகையை தரும்படியும் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுத்து சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை பெற விரும்பாத மணிகண்டன், இதுதொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் கூறிய அறிவுரையின்படி மணிகண்டன் ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்துடன் நேற்று மதியம் வட்டத்தூர் சென்றார். பின்னர் அவர், பழனிசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரூ.20 ஆயிரத்துடன் வட்டத்தூர் ரேஷன் கடை அருகில் நிற்பதாக கூறினார். உடனே பழனிசாமி, அங்கு சென்றார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி மணிகண்டன், ரூ.20 ஆயிரத்தை ஊராட்சி செயலாளர் பழனிசாமியிடம் கொடுத்தார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story