பெங்களூருவில், அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை பார்க்க தந்தையிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய நர்சு கைது


பெங்களூருவில், அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை பார்க்க தந்தையிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய நர்சு கைது
x
தினத்தந்தி 7 Oct 2020 9:54 PM GMT (Updated: 7 Oct 2020 9:54 PM GMT)

பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை பார்க்க தந்தையிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய நர்சை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சுகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, லஞ்சம் வாங்கும் நர்சுகளை பிடிக்க ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையில், பெங்களூரு வடக்கு தாலுகாவை சேர்ந்த ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், மல்லேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க அதன் தந்தை முயன்றார். ஆனால் ஆஸ்பத்திரி நர்சு ஆக பணியாற்றி வரும் கோகிலா என்பவர், குழந்தை பார்க்க அந்த நபருக்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிகிறது. மாறாக ரூ.700 லஞ்சம் கொடுத்தால், குழந்தையை பார்க்க அனுமதிப்பதாக அவரிடம் அந்த நர்சு கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையின் தந்தை ரூ.500 தருவதாக கோகிலாவிடம் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார்.

நர்சு கைது

இதையடுத்து, போலீசார் கூறிய அறிவுரையின்படி அரசு ஆஸ்பத்திரி நர்சு கோகிலாவிடம், குழந்தையின் தந்தை ரூ.500-யை கொடுத்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஊழல் தடுப்பு படை போலீசார், நர்சு கோகிலாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நர்சு கோகிலா மீது ஊழல் தடுப்பு படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல, நோயாளிகள், அவர்களது உறவினர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கும் மற்ற நர்சுகளை கைது செய்ய ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் நர்சுகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Next Story