மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தீவிர பரிசோதனை


மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தீவிர பரிசோதனை
x
தினத்தந்தி 13 Oct 2020 5:00 AM IST (Updated: 13 Oct 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் வியாபாரிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் வியாபாரிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் உறவினர்களையும் கண்காணிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு மார்க்கெட் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒரு கட்டமாக மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டோர் உறவினர்களையும் கண்டறிந்து பரிசோதனை செய்து கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் ஒருமுறை கொரோனா பரவும் மையமாக மாறிவிடக் கூடாது என்பதில் மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட தொடங்கியிருக்கிறது. மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுழற்சி முறையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுபட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வீடு தேடி சென்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதே வேளை முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர காலை, மாலை என 2 வேளைகளிலும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் கொரோனா பரவும் தளமாக மாறிவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். வியாபாரிகளின் வாழ்வாதாரம், பொதுமக்கள் நலம் இவற்றை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.


Next Story