வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சாலை மறியல்


வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Oct 2020 9:00 AM GMT (Updated: 13 Oct 2020 9:56 AM GMT)

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அலங்காநல்லூர், சோழவந்தன் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூர்,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணைத்தலைவர் அலெக்ஸ், ஒன்றிய பொருளாளர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் மின்சார திருத்த மசோதா சட்டம், வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நகர துணை செயலாளர் பாலமுருகன், சங்க ஆலோசகர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

சோழவந்தான் தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் வேளாண் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தவமணி, ஆசை, நாகராஜன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து மேலூரில் பென்னிகுவிக் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இலவச மின்சாரம் ரத்து, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வுரிமை பாதிப்புகள் ஏற்படுத்தும் வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என கண்டன கோஷமிட்டனர். சாலை மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா தலைவர் மெய்யர், துணை செயலாளர் பெரியவர், மேலூர் நகர செயலாளர் செல்வம், கீழவளவு கிளைச்செயலாளர் திலகர் உள்பட 15 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story
  • chat