மானாமதுரை யூனியன் கூட்டத்தில் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர் குற்றச்சாட்டு
மானாமதுரை யூனியன் கூட்டத்தில் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
மானாமதுரை,
மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் யூனியன் கூட்டம் யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனா ஆகியோர் வரவேற்றனர்.
முன்னதாக வரவு செலவினங்கள் வாசிக்கப்பட்டன. கவுன்சிலர் சோமசுந்தரம் பேசுகையில், சுகாதார துறையினர் முகாம் நடத்த வரும் போது மக்கள் பிரதிநிதிக்கு எந்த தகவல்களும் தெரிவிப்பதில்லை. கொரோனா பிரச்சினை இருக்கும்போது டெங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்று தினக்கூலி பணியாளர்களுக்கு பொதுநிதியில் இருந்து ரூ. 7 லட்சத்து 84 ஆயிரத்து 520 எடுக்கப்படுகின்றது. இது தேவை இல்லாதது என்றார்.
அதற்கு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை இது நடைமுறையில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட கலெக்டர், வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் ஒப்புதல் பெற்றுதான் சரியான முறையில் பணம் கொடுக்கப்படுகிறது என்றார். அ.தி.மு.க. கவுன்சிலர் ருக்குமணி பேசுகையில், நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பிளிச்சிங் பவுடர், சானிடைசர், லைசால் சரியாக வழங்கப்படுவதில்லை என்றார்.
தி.மு.க. துணை சேர்மன் முத்துச்சாமி பேசுகையில், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என தெரிய வேண்டும். அதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். முடிவில் மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story