திருவண்ணாமலையில், ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றி டாக்டர்கள் சாதனை


திருவண்ணாமலையில், ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றி டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 13 Oct 2020 11:45 AM GMT (Updated: 13 Oct 2020 12:29 PM GMT)

திருவண்ணாமலையில் ஒரு வயது பெண் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். டாக்டர்கள் குழுவை பலர் பாராட்டினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மட்டுமின்றி விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இந்தநிலையில் ஒரு வயது பெண் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை 2 மணி நேர போராட்டத்துக்கு பின் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை அருகில் உள்ள கொளுந்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த தனுஷ்கா என்ற ஒரு வயது பெண் குழந்தை 10-ந்தேதி 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டது. அந்த நாணயம் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய நாணயத்தை அகற்றுவதற்காக டாக்டர்கள் கமலக்கண்ணன், செந்தில்ராஜா, கவுதம், செவிலியர் மணிமேகலை, உதவியாளர்கள் ஜமுனா, ஜானகிராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்து 5 ரூபாய் நாணயத்தை அகற்றி சாதனை படைத்தனர்.

அந்தக் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினரை, மருத்துவக் கல்லூரி டீன் உள்பட டாக்டர்கள், குழந்தையின் பெற்றோர், பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Next Story