மோட்டார்சைக்கிள் கவிழ்ந்ததில் காயமின்றி தப்பியவர் ‘திடீர்’ சாவு


மோட்டார்சைக்கிள் கவிழ்ந்ததில் காயமின்றி தப்பியவர் ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 13 Oct 2020 7:15 PM IST (Updated: 13 Oct 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டம் மாங்குப்பம் கிராமம் அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்ததில் காயமின்றி தப்பியவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

காவேரிப்பாக்கம்,

பாணாவரத்தை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 27). இவர் நேற்று பிற்பகல் வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். பாணாவரம்- வெங்கடாபுரம் சாலையில் மாங்குப்பம் கிராமம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த குணசேகரன் காயம் ஏதும் இன்றி வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குணசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குணசேகரன் தந்தை ஜெயமூர்த்தி, பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story