திருப்பணியை விரைவாக முடித்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் திருப்பணியை விரைவாக முடித்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவட்டார்,
குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் 68-வதும் மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். இந்த கோவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கட்டுவதற்கு முன்பு கட்டப்பட்டதாகும். நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருக்கோவில். திருவிதாங்கோடு மன்னர் காலத்தில் மிகவும் போற்றி வணங்கப்பட்டதாகும்.
1604-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்பு 400 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. 2004-ம் ஆண்டு கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 16 ஆண்டுகளாக கோவிலில் சுற்றுபிரகாரம், கருவறை ஆகியவை சீரமைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மூலிகை ஓவியங்கள் வரையும் பணிகள், விமானம் சரிசெய்தல் பணிகள் நடந்து வருகிறது. மேலும் மண்டப செப்புகூரையில் அஷ்டபந்தனம் பூசுதல், கண்காணிப்பு கேமரா அமைத்தல், 4 வெள்ளி வாகனங்கள் புனரமைத்தல், மின் இணைப்பு வேலைகள், மடப்பள்ளி புனரமைத்தல், கிழக்கு, மேற்கு, வடகிழக்கு கோபுர வாசல், தேக்கு மரக்கதவு செப்பனிடுதல், கொடிமரம் நிறுவுதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
மந்த கதியில் நடந்து வரும் மேற்கண்ட பணிகளை விரைவாக நடத்தி முடித்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவட்டார் குலசேகர பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதற்கு பொன்மனை அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லெட்சுமி பாய் தம்புராட்டி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கூறி கோவில் திருப்பணிகள் நடைபெற திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.
இதில் திருவிதாங்கூர் கோவில்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ராதாகிருஷ்ணன், வக்கீல் ஆனந்த். சி. ராஜேஷ், சுரதவனம் முருகதாஸ், திருவிதாங்கூர் அரச குடும்ப பிரதிநிதியான எழுத்தாளர் சைலஜா, மணலிக்கரை மடம் தந்திரி சஜித்சங்கரநாராயணகுரு ஆகியோர் பேசினர். கோவில் மேலாளர் மோகன் குமார் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை விடுப்பது என்றும், திருப்பணி விரைந்து நடப்பதற்காக கோவிலில் ஒரு நாள் நாம ஜெபம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story