திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை


திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 14 Oct 2020 4:06 AM GMT (Updated: 14 Oct 2020 4:06 AM GMT)

திண்டிவனம் அருகே டாஸ்டாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் இருந்து ஈச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பழனிவேல்(வயது 46), உதவியாளராக தாஸ்(42) ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் இருவரும் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

நேற்று காலை வந்து பார்த்தபோது டாஸ்டாக் கடையில் அடுக்கி வைத்திருந்த அட்டைபெட்டிகளும், ஒரு சில மதுபாட்டில்களும் சிதறிக்கிடந்தன. அப்போது கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும், விற்பனையாளரும், உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நள்ளிரவில் மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரை கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் துளையிட்டுள்ளனர். அந்த துளை, ஒருவர் சென்று வரும் வகையில் போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்து, 14 பெட்டிகளில் இருந்த 561 மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ஆகும்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து சென்று, கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story