நடத்தையில் சந்தேகம்: ஓசூரில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை கணவர் போலீசில் சரண்


நடத்தையில் சந்தேகம்: ஓசூரில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை கணவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 14 Oct 2020 7:00 AM GMT (Updated: 14 Oct 2020 4:58 AM GMT)

ஓசூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொலை செய்த அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

ஓசூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஓசூரில் லட்சுமி நாராயண நகர் 9-வது கிராசில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தன்னையும், தனது தாய், தந்தையையும் மனைவி சிந்துஜா மதிக்கவில்லை என கூறி மணிகண்டன் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மனைவியை கொலை செய்த மணிகண்டன் ஓசூர் அட்கோ போலீசில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அட்கோ போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஓசூர் லட்சுமி நாராயணநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story