சேலம் அருகே, கணவரை பிரிந்து வாழ்ந்த பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


சேலம் அருகே, கணவரை பிரிந்து வாழ்ந்த பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 14 Oct 2020 5:54 AM GMT (Updated: 14 Oct 2020 5:54 AM GMT)

சேலம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம்,

சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவருடைய மகள் காந்தாமணி (வயது 32), பி.காம். முடித்துள்ளார். இவருக்கும் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக காந்தாமணி கணவருடன் கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டில் கடந்த 7 மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது வீட்டின் பின்புறம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அவர் குதித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் அரை மணி நேரம் போராடி காந்தாமணியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதையடுத்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்ததால் காந்தாமணி மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் அவருடைய தற்கொலை குறித்து சேலம் உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story