வாய்மேட்டில், ஜவுளி பூங்காவில் தையல் பயிற்சிக்கு அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு - முதல்கட்டமாக 3,600 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
வாய்மேட்டில் ஜவுளி பூங்காவில் தையல் பயிற்சிக்கு அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த பயிற்சி மையத்திற்கு முதல் கட்டமாக 3,600 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி ஊராட்சியில் ரூ.96 கோடி செலவில் வேதா ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா அமைய உள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ஆயத்த ஆடை ஜவுளி பூங்காவின் தையல் பயிற்சிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், ஜவுளித்துறை முதலீட்டாளர்கள், சங்க தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
முன்னதாக ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி, தகட்டூர் பைரவர் கோவில் அருகில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜவுளி பூங்காவில் தையல் பயிற்சி பெறுவதற்கு முதல்கட்டமாக 3,600 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தையல் எந்திரங்களை கொண்டு வந்து பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி மையத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த வேலையில் சேருவதற்கு யாருடைய சிபாரிசும், வயதுவரம்பு, படிப்பு, ஜாதி போன்றவை தேவையில்லை. நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் எதையும் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர் மீனாட்சிசுந்தரம், ராமையன், தமிழரசி, தேவிசெந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story