தா.பழூர் அருகே, சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி - 4 பேர் படுகாயம்


தா.பழூர் அருகே, சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி - 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Oct 2020 10:15 PM GMT (Updated: 21 Oct 2020 3:00 AM GMT)

தா.பழூர் அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த மதனத்தூர் காலனி பகுதியில் பொன்னார் பாலம் அருகே சிறிய அளவிலான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று மாலை 7 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி பைப் ஏற்றி வந்த சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிவிட்டு, கோவிலின் முகப்பு பகுதியில் மோதி நின்றது. இதில் அங்கு பேசிக் கொண்டிருந்த வாலிபர்கள் அனைவரும் லாரியின் அடியில் சிக்கினர்.

இதில் மதனத்தூர் காலனியைச் சேர்ந்த செல்வமணியின் மகன் செல்வகுமார் (வயது 22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் பிலவேந்திரன், சுந்தரமூர்த்தி மகன் சூரியமூர்த்தி, ராஜேந்திரன் மகன் ராஜ்கிரண் மற்றும் வாணதிரையன்பட்டினத்தை சேர்ந்த அய்யாவு மகன் பாஸ்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சூரியமூர்த்தி, பாஸ்கர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ், உதவி சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் உடனடியாக வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இறந்தவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியே சோகமயமாக காணப்பட்டது. மேலும் சாலை மறியல் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story