மரக்கன்று நட குழி தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு


மரக்கன்று நட குழி தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 5:45 AM GMT (Updated: 23 Oct 2020 5:35 AM GMT)

மதுக்கூர் அருகே மரக்கன்று நட குழி தோண்டிய போது பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் லெனின். நேற்று இவர் தனது நிலத்தில் கொய்யா மரக்கன்றுகள் நட வேலையாட்கள் மூலம் குழி தோண்டினார். அப்போது குழியில் இருந்து வினோத சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் குழிதோண்டும் பணியை விரைவுபடுத்தினர். அப்போது குழியில் இருந்த பழங்காலத்து 3 சாமி சிலைகள், பூஜை பொருட்கள், உலோக பானைகள் உள்பட 27 பொருட்கள் இருந்தன.

சிலைகள் மற்றும் பொருட்களை வெளியே எடுத்த தொழிலாளர்கள் அவற்றை நில உரிமையாளர் லெனினிடம் ஒப்படைத்தனர். இது குறித்து லெனின் அத்திவெட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 3 சாமி சிலைகள் உள்பட 27 பொருட்களையும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்து சென்றனர். மேலும் சாமி சிலைகள் மற்றும் பொருட்கள் எந்த உலோகத்தை சேர்ந்தது என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story