சூளகிரி அருகே ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கியது போலீஸ் தனிப்படை


சூளகிரி அருகே ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கியது போலீஸ் தனிப்படை
x
தினத்தந்தி 26 Oct 2020 1:18 AM GMT (Updated: 26 Oct 2020 1:18 AM GMT)

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீஸ் தனிப்படை நெருங்கியது.

ஓசூர்,

காஞ்சீபுரத்தில் இருந்து செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த 21-ந் தேதி சென்ற போது கொள்ளையர்கள் லாரியை வழிமறித்து 2 டிரைவர்களை தாக்கினார்கள். மேலும் லாரியை கடத்தி சென்று அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தனர். மேலும் லாரியை சிறிது தொலைவில் விட்டு சென்றனர்.

இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார், கொள்ளையர்களை தேடி மத்திய பிரதேச மாநிலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு விரைந்துள்ளார்கள். போலீசாரின் விசாரணையில் கொள்ளையர்கள் காஞ்சீபுரத்தில் இருந்தே, செல்போன் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை நோட்டமிட்டு வந்ததும், அவர்கள் வந்த லாரியில் பல்வேறு நம்பர் பிளேட்டுகளை மாற்றியதும் தெரிய வந்தது.

8 பேரிடம் விசாரணை

காஞ்சீபுரத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, கன்டெய்னர் லாரியை கொள்ளையர்கள் வந்த வாகனம் பின்தொடர்ந்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலத்தில் பதுங்கி உள்ள கொள்ளையர்களை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் தனிப்படை நெருங்கி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அடையாளம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். 4 தனிப்படைகள் வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவார்கள் என தெரிவித்தனர். 

Next Story