வேலூரில் பரபரப்பு: டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு


வேலூரில் பரபரப்பு: டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Oct 2020 12:00 PM IST (Updated: 26 Oct 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 2 சந்தனமரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர்.

வேலூர், 

வேலூர் அண்ணாசாலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவையும் செயல்படுகிறது. இப்பகுதியில் எந்தநேரமும் போலீசார் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். வளாகத்தில் ஆங்காங்கே சந்தனமரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றனர். மரங்களின் முக்கிய பாகங்களை எடுத்துச் சென்ற அவர்கள் சிறிய மரக்கட்டைகளை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றனர். இந்த நிலையில் காலையில் இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வனத்துறையிடம் புகார் செய்யப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

நேதாஜி மைதானத்தில் போலீசாருக்கு கவாத்து பயிற்சி இன்று (நேற்று) காலை நடந்தது. இதில் கலந்து கொள்ள போலீசார் சென்று விட்டனர். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் அருகில் உள்ள கல்லறை தோட்டம் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த மரத்தையும், பின்புறம் இருந்த மற்றொரு மரத்தையும் வெட்டிச் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை கண்டறிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

வலைவீச்சு

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மரத்தை வெட்டிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறோம். சட்ட நடைமுறைகளுக்காக மரத்தின் அடிப்பாகத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல கலெக்டர் பங்களா, சுற்றுலா மாளிகை, டி.ஐ.ஜி. அலுவலகத்தில் மர்மநபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story