ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்துக் கொலை ஆடு திருடும் கும்பல் வெறிச்செயல்


ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்துக் கொலை ஆடு திருடும் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 27 Oct 2020 6:34 AM GMT (Updated: 27 Oct 2020 6:34 AM GMT)

திருவானைக்காவலில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். ஆடு திருட வந்த கும்பல் அவரை தீர்த்துக்கட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரம் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 52). ஆட்டோ டிரைவர். இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். முருகன் ஆட்டோ ஓட்டுவது மட்டுமின்றி வீட்டின் பின்புறம் சில ஆடுகளையும் வளர்த்து வந்தார்.

திருவானைக்காவல் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரது மகன் மணிகண்டன். தாய்-மகன் இருவரும் வீட்டின் அருகில் இறைச்சிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று ஆட்டோ ஓட்டிச்சென்ற முருகனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் அவரை வழிமறித்து, அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது. தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் பவன்குமார் ரெட்டி நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

ஆடு திருடும் கும்பல்

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஆட்டோ டிரைவர் முருகன், கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அன்று நள்ளிரவு ஆடுகளை திருட கும்பல் ஒன்று வந்துள்ளது. அப்போது வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் குரைத்ததால் விழித்துக்கொண்ட முருகன், ஆடுகள் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு 4 பேர், ஆடுகளை திருடிக்கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளை திருட வந்தது, பாரதிநகரை சேர்ந்த பரமேஸ்வரி, அவரது மகன் மணிகண்டன் மற்றும் சச்சிதானந்தம், பூபதி ஆகியோர் என தெரிய வந்தது.

தாக்குதல்

ஆட்டோ டிரைவர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆடு திருட வந்தவர்களை தட்டிக்கேட்டனர். அப்போது அந்த கும்பல் தாக்கியதில், முருகன், புஷ்பவல்லி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக முருகன் கொடுத்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனால், பரமேஸ்வரி குடும்பத்தினருக்கு முருகன் குடும்பத்தினர் மீது பகை ஏற்பட்டது.

கொலை செய்தது எப்படி?

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு, ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முருகன், மனைவி புஷ்பவல்லியுடன் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை பின்தொடர்ந்து பரமேஸ்வரின் மகன் மணிகண்டன் மற்றும் சச்சிதானந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.

பின்னர், வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்து முருகன் இறங்கும் வேளையில், அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் முருகனை தாக்கியதுடன் வீட்டு வாசலில் படுக்க வைத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளது. அதை தடுக்க முயன்ற மனைவி புஷ்பவல்லிக்கும் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

2 பேர் சிக்கினர்

இந்தநிலையில் நேற்று மாலை கொலையாளிகள் 2 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. தலைமறைவான மணிகண்டன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story