கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட கோவில் நிலத்துக்கு கூடுதல் மதிப்பீடு வழங்க வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட கோவில் நிலத்துக்கு கூடுதல் மதிப்பீடு வழங்க வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2020 12:45 PM GMT (Updated: 29 Oct 2020 1:41 PM GMT)

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்துக்கு கூடுதல் மதிப்பீடு வழங்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். ஆனால் அப்போது இந்த பணியில் ஈடுபட்டவர் இறந்ததால், ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையாமல் போனது.

வரலாற்று சிறப்பு மிக்க அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடந்த 200 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலும், குடமுழுக்கு நடத்தப்படாமலும் கோவில் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலம் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இந்த இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக தமிழக அரசு தேர்ந்தெடுத்து, அதற்காக அந்த இடத்தில் 35 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

இதையடுத்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வீரசோழபுரத்தைச் சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

அதாவது குறிப்பிட்ட 35 ஏக்கர் நிலத்துக்கு சந்தை மதிப்பு ரூ.29 கோடியே 17 லட்சம் என அறநிலையத்துறை கூறி உள்ளது. ஆனால் மாவட்ட கலெக்டரின் மதிப்பீட்டில் ரூ.1 கோடியே 98 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோவில் நிலம் விற்பனையில் ஏதேனும் கருத்து, மறுப்பு தெரிவிப்பதாக இருந்தால் வருகிற 29-ந்தேதிக்குள் (அதாவது இன்று) சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக அவசர அவசரமாக கடந்த 23-ந் தேதி கலெக்டர் அலுவலக கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.

நிலத்தை விற்பனை செய்வதற்கு முன்னதாகவே கட்டுமான பணிகளை தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிலத்தில்தான் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட வேண்டுமா?, வேறு இடமே இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவில் நிலம் விற்பனை செய்யப்படுவது தொடர்பான கருத்து கேட்பு குறித்து கிராமத்தில் முறையாக அறிவிப்பு செய்யப்படவில்லை என புகார் தெரிவித்ததின் பேரில் சில நாட்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் மதிப்பீட்டு தொகை வழங்குவதோடு, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தெய்வீகன் கூறும்போது-

எங்கள் கிராமத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு இந்து அறநிலையத் துறையில் இருந்து வருவாய் துறைக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார்கள். இந்த மதிப்பு மிகவும் குறைவாகும். மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்யக்கூடாது. தரை வாடகைக்கு தான் விட வேண்டும். எனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் மதிப்பீட்டு தொகை வழங்க வேண்டும். சேதமடைந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் எங்கள் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்க உள்ளோம். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் எங்கள் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. அதேபோல் கோவிலுக்கு சொந்தமான இடத்தை வருவாய் துறைக்கு விற்பனை செய்வது சம்பந்தமாக, எங்கள் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதிகாரிகளிடம் கேட்டால் பத்திரிகையில் விளம்பரப்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் எங்கள் பார்வைக்கு அது வரவில்லை என கூறினார்.

அதே கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் சிதிலமடைந்து கிடக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். ஆனால், இதுநாள் வரைக்கும் அது நடைபெற வில்லை. எனவே சிதிலமடைந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும். அதாவது புதிதாக கட்டும் கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா அன்றே, இக்கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும் என்றார் அவர்.

வீரசோழபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறும்போது, எங்கள் கிராமப் பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதை வரவேற்கிறோம். ஆனால் இதற்காக கையகப்படுத்தப்பட்ட கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பை விட குறைவாக மதிப்பிட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

Next Story