போதைப்பொருள் வியாபாரிக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக பெங்களூருவில் கேரள முன்னாள் மந்திரி மகன் கைது - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை


போதைப்பொருள் வியாபாரிக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக பெங்களூருவில் கேரள முன்னாள் மந்திரி மகன் கைது - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2020 11:45 PM GMT (Updated: 29 Oct 2020 7:28 PM GMT)

போதைப்பொருள் விற்பனையாளருக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கேரள முன்னாள் உள்துறை மந்திரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, அமலாக்கத்துறையினர் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக அனூப் மற்றும் நடிகை அனிகா உள்ளிட்டோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

கன்னட திரை உலகில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர்-நடிகைகளுக்கு கைதானவர்கள் போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதனை தொடர்ந்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன், கேரள மாநில முன்னாள் போலீஸ் மந்திரியான கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனான பீனேசுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே கர்நாடக போலீசார், பீனேசிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர்.

அதே நேரத்தில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பதும் தெரியவந்தது. அதுகுறித்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனூப்புக்கும், பீனேசுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அனூப்புக்கு பீனேஷ் ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறையினருக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக கடந்த 6-ந் தேதி பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பீனேஷ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது தனது நண்பர்கள் மூலமாக அனூப்புக்கு பீனேஷ் பணம் கொடுத்தது பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தது. அன்றைய தினம் அவரிடம் விசாரணை நடத்திவிட்டு அமலாக்கத்துறையினர் விடுவித்தனர். இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி பீனேசுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

அதன்படி, நேற்று காலையில் பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பீனேஷ் ஆஜரானார். அப்போது போதைப்பொருள் வியாபாரி அனூப்புக்கு ரூ.50 லட்சம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்ததுடன், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் பீனேஷ் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்ததால், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்திவிட்டு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

பீனேசிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அவரை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, பீனேசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story