கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்: முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்


கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்: முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 30 Oct 2020 4:19 AM GMT (Updated: 30 Oct 2020 4:19 AM GMT)

கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்து வருகிறது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் கூறினார்.

கும்பகோணம், 

தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மற்றும் பூ கட்டுவோர் பேரவை தஞ்சை மண்டல மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பாளர் செல்வி தலைமை தாங்கினார்.

மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், தஞ்சை மண்டல அமைப்பாளர் பாவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை வடக்கு மாவட்ட இணை அமைப்பாளர் சிவசெந்தில் வரவேற்றார். விசுவ இந்து பரிசத் மாநில துணை தலைவர் கிருஷ்ணசாமி, கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி, இணை அமைப்பாளர் சின்னப்பா, ஆலோசகர் பரமசிவம், கும்பகோணம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், பாலன், ரமேஷ், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூசாரிகளுக்கு ஓய்வூதியம்

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கோவில் பூசாரிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணம் போதுமானதாக இல்லை. கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதை திசை திருப்ப மசூதிகளில் வேலை பார்க்கும் முஸ்லிம் குருமார்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்தது. இந்த நிலையில் அரசு பாரபட்சமாக செயல்படக்கூடாது என பூசாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சட்டசபை கூட்டத்தின்போது விதி 110-ன் கீழ் பூசாரிகளுக்கும் சம்பளம் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் அறிவித்தார். இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்து வருகிறது.

ஆராய்ந்து பேச வேண்டும்

திருமாவளவன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் எந்த ஒரு கருத்தையும் ஆராய்ந்து பேச வேண்டும். மனுநீதி குறித்து எதுவும் தெரியாமல் யாரோ கூறியதை கேட்டு பேசி உள்ளார். மனுநீதி குறித்து நன்கு அறிந்து கருத்தை தெரிவிக்க வேண்டும்.

இந்து தர்மத்தில் ஏராளமான உயர்ந்த கருத்துகள் உள்ளன. இட ஒதுக்கீடு வேண்டும் என கூறுபவர்கள் தான் சாதி இல்லை என கூறிக்கொண்டு சாதியை வளர்த்து வருகின்றனர்.

விசாரிக்க வேண்டும்

பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக கருத்துகளை வெளியிட வேண்டும். ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது. அதை வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு போராடுபவர்களுடைய சொத்து விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story