பசும்பொன் கிராமத்திற்கு தடையை மீறி சென்றவர்களை - போலீசார் தடுத்ததால் சாலை மறியல்


பசும்பொன் கிராமத்திற்கு தடையை மீறி சென்றவர்களை - போலீசார் தடுத்ததால் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Oct 2020 10:00 PM GMT (Updated: 31 Oct 2020 3:33 AM GMT)

பசும்பொன் கிராமத்திற்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மானாமதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவிற்கு நேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன்அடிப்படையில் சென்றுக்கொண்டிருந்தனர். குறிப்பாக இந்த விழாவிற்கு அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதி கிடையாது என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிஅளவில் மானாமதுரையை அடுத்த சங்கமங்கலம் என்ற இடத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் குருபூஜைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் ஏராளமானோர் சென்றுக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் முதலில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதியில்லை என்று கூறினர்.

இதையடுத்து அவர்கள் அங்கேயே மறியல் போராட்டம் நடத்த தொடங்கினர். இதற்கிடையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன்ராஜகோபால் தலைமையில் அங்கு வந்த போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளை இங்கு நிறுத்தி வைத்து விடுங்கள். நீங்கள் பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு பஸ் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறினர். ஆனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை கேட்க மறுத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் உறுதியாக மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர். இதையடுத்து வாகனத்தில் ஒரு சிலர் மட்டும் ஏறி சென்றனர். மற்றவர்கள் செல்ல மறுத்து விட்டதால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

Next Story