மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை முன்பு அனைத்து வியாபாரிகள், பொதுநல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - கரித்துகள் வெளியேறுவதை தடுக்க கோரிக்கை
மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரித்துகள்களை தடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொநல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி 1-வது கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்போது இங்கு அரவை தொடங்கியதை அடுத்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட கரும்புகளை அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரி துகள்களால் சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே ஆலையில் இருந்து கரித்துகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என அனைத்து வியாபாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் அறிவித்தன.
அதன்படி நேற்று கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு அனைத்து வியாபாரிகள் சங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், ஊர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறும்போது, சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகையில் இருந்து அதிகளவில் கரித்துகள்கள் வெளியேறி சுற்றுவட்ட பகுதியான பழையூர், பொரசப்பட்டு, சுத்தமலை, ஆற்கவாடி, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், பொருவளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதாகுப்பம், வாழவச்சனூர், இளையாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் பறந்து விழுவதால் குடிநீர் மாசு படுகிறது. மேலும் பொதுமக்கள் சலவை செய்து உலர வைக்கும் துணிகளிலும் படிந்து சேதம் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சர்க்கரை ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியேறுவதையும், தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் மற்றும் சாம்பல்கள் வெளியேறுவதையும் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்துகொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story