தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்


தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
x

ஈரோடு மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஈரோடு,

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு அத்தியாவசிய தேவைக்காக பல்வேறு கட்ட தளர்வுகள் ஊடரங்கில் கொண்டு வரப்பட்டன. இந்தநிலையில் இந்த மாதத்தில் இருந்து சினிமா தியேட்டர்களை குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன் திறக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் சினிமா தியேட்டர்களை திறக்க கடந்த சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. தியேட்டர்களை சுத்தம் செய்தல், ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமருவதற்கு இருக்கைகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல், பராமரிப்பு பணிகள் போன்றன மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்களில் படம் ஓடாததால், சினிமா தியேட்டர்கள் திறப்பு தகவல் அறிந்த ஒருசில ரசிகர்கள் நேற்று தியேட்டர்களுக்கு சென்றார்கள். ஆனால் அங்கு தியேட்டர்கள் செயல்படாமல் பூட்டப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது.

ஈரோடு மாவட்டத்தில் 35 சினிமா தியேட்டர்கள் உள்ளன. தற்போது புதுப்படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. பழைய படங்களை திரையிட்டால் ரசிகர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் உள்ளது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே உள்ள வி.பி.எப். கட்டண பிரச்சனை தொடர்பாக முடிவு எதுவும் எட்டப்படாமல் உள்ளது. தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எனவே வருகிற 13-ந் தேதி முதல் தியேட்டர்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story