அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனா ஆலோசனை குழுவில் இடம் பெற்ற ஈரோடு பெண் - டாக்டர் சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி


அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனா ஆலோசனை குழுவில் இடம் பெற்ற ஈரோடு பெண் - டாக்டர் சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Nov 2020 4:21 PM GMT (Updated: 11 Nov 2020 4:21 PM GMT)

அமெரிக்க அதிபர் ஜோபைடன் நியமித்துள்ள கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம் பெற்றுள்ளார். இதனால் சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஈரோடு, 

அமெரிக்காவில் நடந்த பொதுத்தேர்தலில் ஜோபைடன் அமோக வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு பெற்று உள்ளார். அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்து உள்ளார். 13 பேர் கொண்ட இந்த குழுவில் இடம் பிடித்து இருப்பவர் டாக்டர் செலின் கவுண்டர் என்கிற செலின் ராணி கவுண்டர். 43 வயதாகும் டாக்டர் செலின் கவுண்டர் அமெரிக்காவில் மருத்துவத்துறை ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க நாட்டின் காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராக உள்ளார்.

புதிய அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்று இருக்கும் டாக்டர் செலின் கவுண்டர், இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்து இருக்கிறார்.

இவரது தந்தை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். பணி மற்றும் கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கேயே திருமணம் செய்து கொண்டு அமெரிக்க குடிமகன் என்ற அந்தஸ்தை பெற்றார். அவரது மகள்தான் செலின் கவுண்டர். இவர் பல முறை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு வந்து அவரது உறவினர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்பது பெருமைக்கு உரியது.

தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டின் உயரிய ஒரு பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

நேற்று டாக்டர் செலின் குறித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். தூரபாளையம் கிராமத்தில் வசித்து வரும் டாக்டர் செலினின் பெரியப்பா மகள் அன்னபூரணி கிராமத்து மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி அன்னபூரணி கூறியதாவது:-

செலின் எனது தந்தை சுப்பையனின் சொந்த தம்பி நடராஜின் மகள். இவர் அமெரிக்காவுக்கு சிறுவயதிலேயே சென்று விட்டார். அங்கேயே திருமணமாகி விட்டாலும் எங்களை அடிக்கடி வந்து பார்ப்பார். இப்போது எனது மகள் கிருஷ்ணவேணியும், மருமகன் பாலாஜியும் அமெரிக்காவில் உள்ளார்கள். அவர்களுக்கும், செலினுக்கும் தொடர்பு உண்டு. அமெரிக்காவில் ஏதோ பெரிய பதவி செலினுக்கு கிடைத்து இருக்கிறது என்று எனது மகள்தான் எனக்கு செல்போனில் அழைத்து கூறினாள். அது என்ன என்றெல்லாம் எனக்கு புரியவில்லை. ஆனால், எனது மகள் சந்தோஷமாக பேசியபோது அது ஏதோ பெரிய பதவிதான் என்பதை தெரிந்து கொண்டேன். சற்று நேரத்தில் பெங்களூரில் இருக்கும் எனது மகன் தேவராஜ் என்னிடம் முழு விவரத்தையும் கூறினான். இந்த தகவல் வெளியே வந்த சிறிது நேரத்தில் பல இடங்களில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் செலின் கவுண்டர், அடிக்கடி சொந்த ஊருக்கு வரவில்லை என்றாலும், மொடக்குறிச்சி மக்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் ராஜ் கவுண்டர் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் தலைவர் செலினின் தாயார் நிகோல் கவுண்டர். கவுரவத்தலைவர் மூத்த சகோதரர் செங்கோட்டையன், செயலாளர் மற்றும் பொருளாளராக தேவராஜ் செயல்படுகிறார். அறங்காவலர்களாக டாக்டர் செலின் கவுண்டர், அவரது தங்கைகள் சபின் தேவி கவுண்டர், ஸ்டெப்னி கவுண்டர் ஆகியோர் உள்ளனர். அறக்கட்டளை செயலாளரும், டாக்டர் செலினின் பெரியப்பா மகனுமான தேவராஜ் கூறியதாவது:-

செலின் அக்காள் மிகவும் திறமையானவர். அவருக்கு வழிகாட்டுதலாக இருந்தவர் எனது சித்தப்பா நடராஜ். 1944-ம் ஆண்டு பிறந்த அவர், பெருமாபாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் படித்தார். பின்னர் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் (தற்போது ஆண்கள் பள்ளி) பி.யூ.சி. முடித்தார். பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பிறகு பணி நிமித்தமாக 1966-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். எங்கள் கிராமத்தில் பட்டப்படிப்பு முடித்த முதல் நபர் எனது சித்தப்பா நடராஜ்தான்.

அமெரிக்கா சென்றபோது, அங்குள்ளவர்களுக்கு நடராஜ் என்பது சரியாக உச்சரிக்க வரவில்லை. எனவே தனது பெயரை ராஜ் என்.கவுண்டர் என்று மாற்றிக்கொண்டார். பணியில் இருந்தபோதே அங்குள்ள நார்த் வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பு மேற்கொண்டார். டொரோண்டோ பல்கலைக்கழகத்திலும் படித்தார். பின்னர் போயிங் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இதற்கிடையே அவரது வகுப்பு தோழரான ஜார்ஜ் என்பவருடைய தங்கையும், தோழியுமான நிகோல் என்பவருடன் காதல் வயப்பட்டார். 1972-ம் ஆண்டு ராஜ் கவுண்டரும், நிகோலும் திருமணம் செய்து கொண்டனர். நிகோல், பிரான்சை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் கவுண்டர்- நிகோல் தம்பதியினரின் தாம்பத்தியத்துக்கு சாட்சியாக செலின் ராணி கவுண்டர், சபின் தேவி கவுண்டர், ஸ்டெப்னி கவுண்டர் ஆகிய 3 மகள்கள் பிறந்தனர்.

செலின் அக்காள் 1977-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி பிறந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்தார். ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றார். யூனிவர்சிட்டி ஆப் வாஷிங்டனில் எம்.டி. பட்டம் பெற்றார். தொற்று நோய்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தநிலையில் அமெரிக்காவில் புகழ் பெற்ற விளையாட்டு இதழின் தலைமை எழுத்தராக உள்ள கிராண்ட வால் என்பவரை விரும்பி 2001-ம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

நாய்கள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது வாழ்வின் நோக்கம், தொற்று நோய்கள் இல்லாத உலகம் வேண்டும் என்பதே என்று கூறி தொற்றுநோய்கள் எங்கெல்லாம் உருவாகிறதோ அங்கெல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து வருகிறார். எபோலா நோய் தொற்று பரவல் ஏற்பட்டபோது தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

தற்போது அவர் அதிபர் ஜோ பைடனின் ஆலோசனைக்குழுவில் ஒரு நபராக இடம் பிடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தகவல் தெரிந்து உடனடியாக அவருக்கு வாழ்த்து கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பொதுவாக நாங்கள் இ-மெயில் உள்ளிட்ட மின்னணு தகவல் பரிமாற்ற சாதனங்கள் மூலம்தான் பேசிக்கொள்வோம். விரைவில் அவருடன் பேச இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் செலின் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்த தேவராஜ், அவர் உண்மையிலேயே ஒரு வழிகாட்டி. அவர் பேசுவதை கேட்டால் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வெற்றியைத்தொட வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதை முழு மனதுடன், முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பார். குப்பையை சேகரிக்கும் வேலையை செய்தாலும், அதை முழு ஈடுபாட்டுடன் அதை நம்மைவிட சிறப்பாக செய்பவர்கள் இல்லை என்ற மனநிலையில் செய்ய வேண்டும் என்பார் என்றும் அவர் கூறினார்.

இதுவரை 4 முறை டாக்டர் செலின் கவுண்டர் மொடக்குறிச்சிக்கு வந்து உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். ராஜ் கவுண்டர் அமெரிக்காவில் தனது 70-வது வயதில் 2014-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி மறைந்தார். அவரது உடல் அஸ்தியை செலின் அவரது சகோதரிகள் மற்றும் அவர்களின் தாயார் நிகோல் கவுண்டர் ஆகியோர் மரபுப்படி எடுத்து வந்து மொடக்குறிச்சியில் அவர் விரும்பியபடி இறுதி மரியாதை செலுத்தி உள்ளனர். இது இன்றும் இந்த பகுதி மக்களின் நினைவில் உள்ளது.

ராஜ் கவுண்டரின் அண்ணன்கள் செங்கோட்டையன்-பாப்பாயி அம்மாள், சுப்பையன்-மீனாட்சி, ராமலிங்கம்-நல்லம்மாள் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்து வாரிசு அமெரிக்காவில் உயர் பதவியில் இருப்பது குறித்து மகிழ்ந்தார்கள்.

செலின் கவண்டரின் அக்காள் முறையான அன்னபூரணியும், அண்ணன் நல்லசிவமும் கிராம மக்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

Next Story