தாராபுரம் அருகே, டிரைவரை கொன்ற வழக்கில் தாய், சகோதரர் கைது


தாராபுரம் அருகே, டிரைவரை கொன்ற வழக்கில் தாய், சகோதரர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2020 10:15 PM GMT (Updated: 12 Nov 2020 2:42 AM GMT)

தாராபுரம் அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த டிரைவரை அடித்து கொன்ற வழக்கில் அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையத்தை சோ்ந்தவா் நல்லசாமி (வயது 55), விவசாயி. அவரது மனைவி தமிழரசி (52). நல்லசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது மகன்களான சதீஸ் (31), சிதம்பரம் (27) ஆகியோருடன் ஊத்துப்பாளையத்தில் தமிழரசி வசித்து வருகிறார்.

மூத்த மகன் சதீசுக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். இளைய மகன் சிதம்பரம் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பல ஆண்டு காலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதாக தெரிகிறது, இதனால் அவரை தமிழரசி கண்டித்தார். ஆனாலும் சிதம்பரம் குடிப்பதை நிறுத்தாமல் தாயிடம் அடிக்கடி பணம் கேட்பதும், பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் கேட்டு தாயாரிடம் சிதம்பரம் தகராறில் ஈடுபட்டார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அண்ணன் சதீஸ் முதலில் வீட்டில் கிடந்த உலக்கையால் சிதம்பரத்தை தாக்கினார். அதில் நிலைகுழைந்து கீழே விழுந்ததை பார்த்த தமிழரசியும் உலக்கையால் சிதம்பரம் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சிதம்பரம் இறந்தார். அப்போது தன் மகன் மீது உள்ள வெறுப்பால் சதீஸ்சிடம் இருந்த உலக்கையை வாங்கி தமிழரசி நான் தான் எனது மகன் சிதம்பரத்தை அடித்து கொலை செய்தாக போலீசில் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் விசாரணை செய்து சிதம்பரத்தின் தாயாா் தமிழரசி, அண்ணன் சதீஸ் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து அலங்கியம் போலீசாா் அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story