கோவில்பட்டி-கயத்தாறு பகுதியில் கனமழை: உப்பாற்று தடுப்பணை நிரம்பி வழிகிறது கண்மாய்கள் உடையும் அபாயம்
கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் உப்பாற்று தடுப்பணை நிரம்பி வழிகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, நிரம்பியுள்ள கண்மாய்கள் உடையும் நிலையில் இருக்கின்றன. நகரசபை தினசரி மார்க்கெட் சகதி காடாக இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவில்பட்டி,
தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் அருகில் உள்ள ராமர் தீர்த்த உப்பாற்று தடுப்பணை நிரம்பி வழிகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த அணையில் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரானது பராக்கிரம பாண்டியபுரம் குளம், ராஜாபுதுக்குடி குளம், சன்னது புதுக்குடி குளம் உள்ளிட்ட குளங்களுக்கு செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கண்மாய்கள் நிரம்பின
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்மழை பெய்தது. கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட்டிலுள்ள தெருக்கள், கடைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக கோவில்பட்டி கண்மாய் மற்றும் சுற்றியுள்ள வானரம்பட்டி கண்மாய், வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய், மூப்பன்பட்டி கண்மாய், ஆலம்பட்டி மற்றும் அத்தைகொண்டான் கண்மாய் ஆகிய 7 கண்மாய்களும் நிரம்பி வழிகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்மாய்கள் உடையும் அபாயத்தில் இருக்கின்றன. இதில் மூப்பன்பட்டி கண்மாய் நிரம்பி மதகு வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. கண்மாயில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் உடைப்பு ஏற்பட்டு சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
சாலைகள் சேதம்
கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கனமழை காரணமாக கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு, புதுரோடு, மார்க்கெட் ரோடு, மந்தித்தோப்பு ரோடு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த ரோடுகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக் கற்ற நிலையில் உள்ளன. இந்த ரோடுகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story