நெல்லை, தூத்துக்குடியில் விட்டு, விட்டு பெய்த மழை; வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அதிகாரிகள் குழு தொடர் கண்காணிப்பு


நெல்லை தாமிரபரணி ஆற்றை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்ட போது எடுத்த படம்.அருகில் கலெக்டர் விஷ்ணு உள்ளார்.
x
நெல்லை தாமிரபரணி ஆற்றை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்ட போது எடுத்த படம்.அருகில் கலெக்டர் விஷ்ணு உள்ளார்.
தினத்தந்தி 4 Dec 2020 4:23 AM IST (Updated: 4 Dec 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

‘புரெவி‘ புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் விட்டு, விட்டு மழை பெய்தது. பொதுமக்கள் நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

‘புரெவி’ புயல்
வங்ககடலில் உருவான ‘புரெவி‘ புயலால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்காக நெல்லை மாவட்டத்தில் 195 முகாம்களும், தூத்துக் குடி மாவட்டத்தில் 93 முகாம் களும், தென்காசி மாவட்டத்தில் 54 முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விட்டு, விட்டு மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. மதியம் 2 மணி அளவில் வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் மழை விட்டு, விட்டு பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியை பொருத்தவரை காலையில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பலர் சாலையில் குடை பிடித்தபடி சென்றனர்.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலமும் மாநகராட்சி ஊழியர்கள் அறிவிப்பு செய்தனர்.

திசையன்விளை, உவரி, இடிந்தரை ஆகிய பகுதிகளில் லேசான வெயில் அடித்தது. கடல் எப்போதும் போல் காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழை பெய்தது.

சிறப்பு அதிகாரி ஆய்வு
நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் நெல்லை மாநகரில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

அப்போது சிறப்பு அதிகாரி கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புயல் மழை வெள்ளம் எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் பாளையங்கால்வாய் பகுதி, சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. கால்வாயில் ஒரு சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிந்துபூந்துறை கரையோர பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் இல்லை. பாபநாசம் அணையில் 80 சதவீதமும், மணிமுத்தாறு அணையில் 60 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. இதற்கு மேல் மழை பெய்தால் 2 அணைகளும் நிரப்பப்பட்டு உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படும். மாஞ்சோலை மலைப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு அனுப்ப பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே அவ்வப்போது லேசான மழை விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்து உள்ளனர். அதே போன்று முத்துநகர் கடற்கரையில் ஆழம் குறைந்த பகுதியில் அலையின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால் சிறிய படகுகளை, முத்துநகர் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து உள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று முன்எச்சரிக்கையுடன் கப்பல்களில் இருந்து சரக்குகள் கையாளப்பட்டன. கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தொடர்ந்து 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி கடல் பகுதி மிகவும் அமைதியாக காணப்பட்டது. லேசான காற்று வீசியது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பெரியதாழையில் கடல் 2 அடி முதல் 3 அடி வரை உள்வாங்கியது.

போலீஸ் கண்காணிப்பு அலுவலர்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறைக்கான கண்காணிப்பு அலுவலர் ஐ.ஜி. சாரங்கன் வெள்ள மீட்பு பணிக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டறிந்தார். தொடர் ந்து மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் ரோந்து சென்று பொதுமக்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை போலீஸ் கண்காணிப்பு அலுவலர் ஐ.ஜி. சாரங்கன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

நீச்சல் வீரர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 550 மணல் மூட்டைகள், 15 ஜெனரேட்டர்கள், 150 மரம் வெட்டும் கருவிகள், 26 பொக்லைன் எந்திரங்கள், 269 மின்மோட்டார்கள், 55 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று 486 பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் தயாராக உள்ளனர். 36 அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்கரை பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

மழை அளவு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அம்பை-0.50, சேரன்மாதேவி-0.60, பாளையங்கோட்டை-2 நெல்லை-1, கருப்பாநதி- 1.5, அடவிநயினார்-2, சங்கரன்கோவில்-3, செங்கோட்டை-1, சிவகிரி -2, திருச்செந்தூர்-1, காயல்பட்டினம்- 2, குலசேகரன்பட்டினம்-4, விளாத்திகுளம்-6, காடல்குடி-6, வைப்பார்-12, சூரங்குடி-11, கோவில்பட்டி- 4, கயத்தாறு-1, கடம்பூர்- 3, ஓட்டப்பிடாரம்- 2, வேடநத்தம்-5, கீழஅரசடி- 1, எட்டயபுரம்-1, ஸ்ரீவைகுண்டம்- 1, தூத்துக்குடி 5.2.

Next Story