குபேரர் கிரிவலத்திற்கு தடை: கிரிவலப்பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு; பக்தர்கள் வேதனை


திருவண்ணாமலை குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி
x
திருவண்ணாமலை குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி
தினத்தந்தி 13 Dec 2020 8:00 PM GMT (Updated: 13 Dec 2020 6:13 PM GMT)

குபேரர் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கிரிவலப்பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குபேரர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

இந்த கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க கோவில்கள் உள்ளது. இதில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேரர் வணங்கிய பின் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகை மாத சிவராத்திரி அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்கின்றனர். இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாத சிவராத்திரி நேற்று வந்தது.

கிரிவலப்பாதையில் தடுப்புகள் அமைப்பு
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குபேரர் கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுப்பதற்கு கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிரிவலம் வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். சிலர் குறுக்கு பாதை வழியாக வந்து கிரிவலம் சென்றனர். மேலும் இந்த பகுதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளூர் என்றால் செல்ல அனுமதித்தும், வெளியூரை சேர்ந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

பக்தர்கள் வேதனை
மேலும் குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாத வகையில் பாதையில் தடுப்பு அமைத்து போலீஸ் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீபத்திருவிழாவின் போது கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது போன்று குபேரர் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்து உள்ளனர்.

Next Story