கோவை மாவட்டத்தில் மருத்துவ முகாம் மூலம் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு - அதிகாரி தகவல்


கோவை மாவட்டத்தில் மருத்துவ முகாம் மூலம் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2020 10:00 PM GMT (Updated: 14 Dec 2020 2:55 AM GMT)

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் மருத்துவ முகாம் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.

கோவை,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் தினமும் 100 முதல் 130 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநகராட்சி பகுதிகளில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 100 வார்டுகளில் ஒவ்வொரு வார்டிலும் ஏதாவது ஒரு பகுதியில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமிற்கு வருபவர்களுக்கு லேசான காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிப்பதின் மூலம் தொற்று பரவுவது தடுக்கப்படுவது மட்டுமின்றி கொரோனாவின் தீவிரத்தையும் தடுக்க முடிகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர ஆங்காங்கே நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் மருத்துவ முகாம்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் 20 சதவீத கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததில் தினமும் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றால் மிகையாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
  • chat