திருப்பூர்-அவினாசி ரோட்டில் கடைக்குள் புகுந்த கார் 10 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்


திருப்பூர்-அவினாசி ரோட்டில் கடைக்குள் புகுந்த கார் 10 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்
x
தினத்தந்தி 14 Dec 2020 3:58 AM GMT (Updated: 14 Dec 2020 3:58 AM GMT)

திருப்பூர்-அவினாசி ரோட்டில் செருப்புக்கடைக்குள் கார்புகுந்தது. இந்த விபத்தில் 10 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி.சிக்னல் அருகே சபீக் ரஹ்மான் என்பவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் கடையின் வெளிப்புறம் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது.

இதேபோல் கடையின் உள்புறமும் ஏராளமான வாடிக்கையாளர்களும் இருந்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து செருப்பு கடைக்குள் புகுந்ததுடன், பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது.

10 பேர் காயமின்றி தப்பினர்

இதனால் செருப்பு கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து செருப்பு கடைக்குள் புகுந்த காரை பார்ப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடைக்குள் புகுந்து நின்ற காரை அப்புறப்படுத்தினார்கள்.

இந்த விபத்தில் கடையின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த சபீக் ரஹ்மானுடைய மொபட் மற்றும் கடையின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் கடைக்குள் இருந்த உரிமையாளர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story