மகன் திருமணம் செய்ததை மறைத்து சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த 2 பேர் போக்சோவில் கைது


மகன் திருமணம் செய்ததை மறைத்து சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த 2 பேர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 14 Dec 2020 3:00 AM IST (Updated: 14 Dec 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

மகன் திருமணம் செய்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இவருக்கும் பீளமேடுபுதூரை சேர்ந்த சி.என்.சி. லேத் ஆபரேட்டர் சரவணன் (23) என்பவருக்கும் பஸ்சில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து சரவணன், அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சரவணன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடந்த அக்டோபர் மாதம் மதுரைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர், அந்த மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் பீளமேடுபுதூர் வந்தனர். இந்த நிலையில், மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வந்தனர்.

இதில், அந்த மாணவி திருமணமாகி பீளமேடுபுதூரில் வசிப்பது தெரியவந்தது. எனவே அந்த வழக்கு கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் சரவணனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த சரவணனின் தந்தை சுப்ரமணியம் (55), தாய் பொன்னி (48) ஆகியோர் மாணவியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தனர். மேலும் தங்கள் மகனுக்கு திருமணமே நடக்கவில்லை எனக்கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது மாணவியை அறைக்குள் வைத்து பூட்டியிருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மகன் திருமணம் செய்ததை மறைத்து சிறுமியை அடைத்து வைத்த சுப்ரமணியம், பொன்னி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story