நெல்லையில், போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு - 18 ஆயிரத்து 512 பேர் பங்கேற்பு


நெல்லையில், போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு - 18 ஆயிரத்து 512 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Dec 2020 7:15 AM GMT (Updated: 14 Dec 2020 7:15 AM GMT)

நெல்லையில் போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் 18 ஆயிரத்து 512 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

நெல்லை, 

தமிழக போலீஸ் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு, நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் என மொத்தம் 21 மையங்களில் நடந்தது.

இந்த தேர்வில் பங்கேற்க ஆண்கள் 16 ஆயிரத்து 708 பேரும், பெண்கள் 3 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 20 ஆயிரத்து 680 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள் 15 ஆயிரத்து 15 பேரும், பெண்கள் 3 ஆயிரத்து 497 பேரும் என மொத்தம் 18 ஆயிரத்து 512 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 168 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வு நடைபெற்ற மையங்களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர். தேர்வுக்கூட கண்காணிப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அவர்கள், தேர்வு எழுத வந்தவர்களை தீவிர சோதனை நடத்தி, அதன் பிறகே தேர்வுக்கூட அறைக்குள் அனுமதித்தனர்.

மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, தேர்வுக்கூட நுழைவுவாசலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

எழுத்து தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு அடுத்தகட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story