சொத்து தகராறில் அக்காளை கொன்று விட்டு நாடகமாடிய தங்கை கைது; தலைமறைவான தங்கையின் கணவருக்கு வலைவீச்சு


கொலை செய்யப்பட்ட தெய்வானை
x
கொலை செய்யப்பட்ட தெய்வானை
தினத்தந்தி 14 Dec 2020 7:30 PM GMT (Updated: 14 Dec 2020 6:11 PM GMT)

சொத்து தகராறில் அக்காளை கொன்று விட்டு நாடகமாடிய தங்கை கைது செய்யப்பட்டார். தலைமறைவான தங்கையின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை
மாங்காடு சந்திரசேகர் நகர் பகுதியை சேர்ந்தவர் தெய்வானை (வயது 40). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது தங்கை லட்சுமி. நேற்று அதிகாலை லட்சுமி, தன்னுடைய அக்காளை யாரோ கொலை செய்து விட்டதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தெய்வானை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தங்கையே அக்காளை கொன்ற அதிர்ச்சி தகவல்அம்பலமானது. இதையடுத்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

தெய்வானை கடந்த சில ஆண்டுகளாக துபாயில் தங்கி வேலை செய்து மாதா, மாதம் தங்கைக்கும், தன்னுடைய மகனுக்கும் பணம் அனுப்பி வந்தார். தெய்வானை மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தெய்வானை அனுப்பிய பணத்தில் லட்சுமி குடும்பம் இருந்து வந்தது.

மது குடித்து விட்டு தகராறு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த தெய்வானையிடம் லட்சுமியின் கணவர் ரமேஷ் குமார் மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் இருவரையும் வீட்டை விட்டு தெய்வானை வெளியேற்றினார். மேலும் இவரது சொத்தில் பங்கு இல்லை என்றும் தெரிவித்தார். அது மட்டுமின்றி ரமேஷ் குமாருக்கு சொந்த ஊரில் அவருக்கு சொந்தமான சொத்துகளையும் அவருக்கு தர விடாமல் தெய்வானை தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி இருவரும் தெய்வானையை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக இருவரும் ஏறி குதித்து உள்ளே சென்று சத்தம் போடாமல் இருக்க தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக்கொண்டார்.

கைது
ரமேஷ் குமார் தான் எடுத்து வந்த கத்தியால் தெய்வானையை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. வாயை பொத்தியபோது தெய்வானை கடித்ததில் லட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை மறைக்க நேற்றுமுன்தினம் காலை மாங்காடு போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தான் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தனது வாயில் மதுவை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த புகார் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் லட்சுமி சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து தகராறில் உடன் பிறந்த அக்காளை கொன்று விட்டு நாடகமாடிய தங்கையை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story
  • chat