நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு


நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Dec 2020 4:43 AM GMT (Updated: 15 Dec 2020 4:43 AM GMT)

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி முதல் கல்லூரிகளில் முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன. மேலும் 7-ந் தேதி முதல் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் முதுநிலை, இளநிலை இறுதியாண்டு வகுப்புகளில் 1,035 மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வகுப்புகள் மற்றும் ஆய்வக வகுப்புகள் அரசு வகுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகளின் படி போதிய சமூக இடைவெளியுடன் நடத்தப்படுகின்றதா? என கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கல்லூரி நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்யப்படுவதையும், கிருமி நாசினி திரவம் பயன்படுத்தப்படுவதையும் நேரில் பார்வையிட்டார். மேலும் வகுப்பறைகள் மற்றும் கணினி, வேதியியல் ஆய்வகங்களில் மாணவிகள் போதிய இடைவெளியில் கற்பதையும் பார்வையிட்டு உறுதி செய்தார்.

முககவசம் அணிய வேண்டும்

அப்போது கலெக்டர் மெகராஜ் மாணவிகளிடம் பேசியதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வகுப்புகளில் நீங்கள் தகுந்த இடைவெளிவிட்டு அமர்வதுடன், கல்லூரிக்கு வரும்போதும், கல்லூரி முடிந்து செல்லும்போதும் தகுந்த இடைவெளி விட்டு செல்ல வேண்டும். பஸ் பயணத்தின்்்்்்்்்்்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கல்லூரியில் தங்கள் அருகில் உள்ள மாணவிக்கு காய்ச்சல் இருந்தால் அதுகுறித்து பேராசிரியர்களுக்கு தெரிவித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவி, வீட்டிற்கு செல்ல எற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெண்கள் கலைக்கல்லூரி முதல்வர் சுகுணா மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர். 

Next Story
  • chat