வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி 393 கிராம நிர்வாக அலுவலர்களிடம் பா.ம.க.வினர் மனு
வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சேலம் மாவட்டத்தில் 393 கிராம நிர்வாக அலுவலர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
சேலம்,
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி ஏற்கனவே பா.ம.க. சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களிடமும் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் நேற்று பெரியபுதூர் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பாவிடம் மனு கொடுத்தார். முன்னதாக அவர் விவேகானந்தர் தெரு பகுதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு ஊர்வலமாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார்.
இதில், வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சிட்டி வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் விசுமாறன், இளைஞரணி நிர்வாகி விஜய், பகுதி செயலாளர் சுரேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மனு
இதேபோல் பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்.ராசரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் சேலம் செவ்வாய்பேட்டை பெரியேரி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர். அப்போது செல்வராதா சில்வர்ஸ் உரிமையாளரும், மாநகர் மாவட்ட துணை செயலாளருமான வெள்ளி செல்வம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலா, கவிதா, சின்னசாமி, ரவி, நந்தகுமார், வார்டு செயலாளர் சென்ட்ரல் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் சத்ரிய சேகர் தலைமையில் ரெட்டியூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது. சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.பி. ராம்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். பா.ம.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம் தலைமையில் நிர்வாகிகள் தாதகாப்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர். சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 393 கிராம நிர்வாக அலுவலர்களிடம் அந்தந்த பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story