அ.தி.மு.க. அரசால் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் காயலான் கடைக்கு போய் விட்டது தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேச்சு
தி.மு.க. ஆட்சியில் கொடுத்த பொருட்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசால் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி காயலான் கடைக்கு போய் விட்டது என தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகர தி.மு.க. சார்பில் ஹவுசிங் போர்டு பகுதியிலும், கந்திலி வடக்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் கசிநாயக்கன்பட்டி கிராமத்திலும் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், கந்திலி ஒன்றிய செயலாளர் கே.எஸ். அன்பழகன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி நடத்தியபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திட்டங்களை பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட டி.வி., கியாஸ் அடுப்பு தற்போது வரை பொதுமக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் அ.தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை காயலான் கடைக்குப் போய் விட்டது. கந்திலி பகுதியில் புதிய அரசு மருத்துவமனை, கல்லூரி அமைத்துக் கொடுப்பேன் என சத்தியம் செய்து கொடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் திருப்பத்தூர் மாவட்டம் எனப் பெயர் போடுகிறார்கள். தி.மு.க. மட்டும் இன்னும் வேலூர் மேற்கு மாவட்டம் எனக் கூறுகிறீர்கள், எனக் கேட்டதற்கு, இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் எழுதி் கொடுத்தால் திருப்பத்தூர் மாவட்டம் என விரைவில் மாற்றப்படும், தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்கு நேரம் உள்ளது.
அ.தி.மு.க. அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் தர உள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, அடுத்த பட்டியல் தரும்போது நிருபர்களுக்கு தெரிவிக்கப்படும், அரசு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டபோது போலீசார் வெளியேற்றப்பட்டது குறித்து கேட்டதற்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் போக வேண்டாம், எனக்கூறி உத்தரவிடப்பட்டுள்ளது. நான் எனது தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதில்லை எனத் தெரிவித்தார்.
Related Tags :
Next Story