சட்டமன்ற தேர்தலில் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு - வேலூரில் விக்கிரமராஜா பேட்டி


சட்டமன்ற தேர்தலில் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு - வேலூரில் விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2020 6:11 PM IST (Updated: 31 Dec 2020 6:11 PM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தருவோம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மண்டி தெருவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் கடைகளுக்கு 2 மாத வாடகையை தள்ளுபடி செய்து முதல் -அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால் வேலூர் மாநகராட்சி கமிஷனர் இதனை கண்டுகொள்ளாமல் வாடகை வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அதிகாரிகள் இதுபோன்ற கெட்ட பெயர்களை எடுக்காமல் முதல்-அமைச்சர் அறிவித்த 2 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். வேலூர் மார்க்கெட் பகுதியில் நீண்ட நாட்களாக கால்வாய் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது‌. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல நகரங்களில் கடைகள் இடிக்கப்படுகின்றன. அவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனாவால் பலியான வியாபாரிகள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். அரசு இதில் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெயர் பலகையில் 10 சதவீத இடத்தில் 5 சதவீத இடம் தமிழில் எழுத வேண்டும். தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதை சுற்றறிக்கையாகவும் தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளோம்.

வணிகர்கள் ஜி.எஸ்.டி. கட்டுவதில் அதிக குளறுபடி உள்ளது. குளறுபடிகளை அகற்றினால் தான் முறையாக ஜி.எஸ்.டி. கட்டுபவர்கள் தொடர்ந்து கட்ட முடியும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நாங்கள் அழுத்தம் தர உள்ளோம். இன்னும் 6 மாத காலத்திற்கு அரசு துறை அதிகாரிகள் வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைப்பதோ, கடைக்கு சென்று வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பதோ கூடாது. அதுபோல, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் லஞ்சம் வாங்குவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது..

3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பிரதமர் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்.

வியாபாரிகள் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் உள்ளது. அதனை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களுடைய கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக ஏற்று அதை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு வரும் தேர்தலில் ஆதரவு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினர்.

பேட்டியின் போது வணிகர்சங்க நிர்வாகிகள் ஆம்பூர் கிருஷ்ணன், ஞானவேலு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story