தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் `நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் `நீட் தேர்வு ரத்து செய்யப்படும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 8 Jan 2021 2:25 AM GMT (Updated: 8 Jan 2021 2:25 AM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் `நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சமயபுரம்,

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோட்டில் திறந்த வேனில் நின்று பேசினார். அப்போது, மண்ணச்சநல்லூரில் அவருக்கு தி.மு.க. நிர்வாகி என்.எஸ்.கருணை ராஜா வீரவாள் கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து திருப்பைஞ்சீலி சிவன்கோவில் அருகே கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும். அதற்கு பொதுமக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் `நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். சொல்வதைத்தான் செய்வோம். செய்வதுதான் சொல்லுவோம் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிச்சயமாக நிறைவேற்றும் என்றார்.

துறையூர்

இதுபோல் துறையூரில் உள்ள முசிறி பிரிவு ரோடு, பஸ் நிலையம், பெருமாள் மலை அடிவாரம் உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார் பின்பு துறையூரில் இருந்து பெரம்பலூர் புறப்பட்டு சென்றார். இதில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Next Story