மருத்துவ படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை மனு


மருத்துவ படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 12 Jan 2021 3:51 AM GMT (Updated: 12 Jan 2021 3:51 AM GMT)

மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் மதிவண்ணன், துணைத் தலைவர் சந்திரமோகன், பொதுச்செயலாளர் ராபர்ட் பாபு மற்றும் நிர்வாகிகள் திரளாக வந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று பாதிக்கப்பட்ட 5,068 பேர் மீதுள்ள குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து பணிவரன் முறைபடுத்தவேண்டும். மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறோம். இதை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் என்ஜினீயரிங் கல்லூரி, வேளாண்மை கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகளிலும் 20 இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அவசியம்.

காலி பணியிடங்கள்

அரசால் கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை உடனே வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனே வழங்குதல் அவசியம்.

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளி மற்றும் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story