சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தேவையான 59,800 கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்பட்டன


சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தேவையான 59,800 கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 15 Jan 2021 2:49 AM GMT (Updated: 15 Jan 2021 2:49 AM GMT)

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தேவையான 59 ஆயிரத்து 800 கொரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்று கொண்டு வரப்பட்டன. இதனை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

சேலம், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு வருகிற 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் 16 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இனணந்து செய்து வருகின்றன. இதற்கான கொரோனா தடுப்பூசி ஒத்திகை கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையில் இருந்து லாரி மூலம் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்று காலை சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

கலெக்டர் பார்வையிட்டார்

இதையடுத்து காலை 10 மணி அளவில் கலெக்டர் ராமன் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசிகள் இருந்த பெட்டிகள் லாரியில் இருந்து இறக்கப்பட்டன. பின்னர் அந்த பெட்டிகள் சேலம் மண்டல குளிர்சாதன நோய் தடுப்பு மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதையடுத்து அந்த அறையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது;-

சேலம் மண்டலத்துக்குட்ட சேலம் மாவட்டத்துக்கு 27,800, நாமக்கல் மாவட்டத்துக்கு 8,700, தர்மபுரி மாவட்டத்துக்கு 11,800, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 11,500 என மொத்தம் 59 ஆயிரத்து 800 கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சேலத்தை தவிர பிற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 16 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் என 25 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றன. இதற்கான பணிகளை செய்து வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story