தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை


தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் வாழைத்தோட்டத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
x
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் வாழைத்தோட்டத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 15 Jan 2021 9:00 PM GMT (Updated: 2021-01-16T00:40:41+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதம் அடைந்து உள்ளன. இதுவிவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் நிரம்பி வழிகிறது. உபரிநீர் உப்பாற்று ஓடையில் செல்கிறது. இந்த தண்ணீர் அந்த பகுதியில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி பாய்ந்து ஓடியது.

மூழ்கியது
இந்த மழை வெள்ளம் பெரும் பயிர் சேததத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நடுவை முடிவடைந்து வளரும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ளன. இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பயிர்களை மூழ்கடித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

முளைத்தன
அதே போன்று மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு ஆகியவை 78 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பிலும், 69 ஆயிரம் எக்டேர் பரப்பில் சிறுதானியங்களும், 47 ஆயிரம் எக்டேர் பரப்பில் மக்காச்சோளம், 5 ஆயிரத்து 300 எக்டேர் பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பயறு வகைகள், மக்காச்சோளம் உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பயறு வகை பயிர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட விளைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முளைக்கத் தொடங்கி உள்ளன. இதேபோன்று பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளும் தண்ணீரில் மிதக்கின்றன. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கினால், வாழைகளும் அழுகி சேதம் அடையும் சூழல் இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.மழைநீர் வடிந்த பிறகு பயிர் ேசதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

கயத்தாறு
கடந்த 3 நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், கயத்தாறு தாலுகா தெற்குமயிலோடை பஞ்சாயத்தில் உள்ள பட்டவர்த்தி குளத்தில் நீர் பாசன பகுதி வயல்களில் நெல் பயிர்கள், அறுவடைக்கு தயாராகியுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. சுமார் 20 ஏக்கரில் நெல்பயிர்கள் தண்ணீரில் அழுகி வருகின்றன. இந்த வகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீடு தொகை வழங்கவும், மீண்டும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வட்டி இல்லா கடன் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்து, பாசி பயிர்கள் சேதம்
கயத்தாறு அருகே தென்னம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் சுமார் 1200 ஏக்கர் நிலத்தில் உளுந்து, பாசி பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இந்தப் பயிர்கள் தற்போது பூத்து காய்த்து அறுவடை செய்யும் நேரத்தில், கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக தொடர் மழையின் காரணமாகவும், அறுவடைக்கு தயாரான உளுந்து பாசி பயிர்கள் தற்பொழுது செடியிலேயே முளைத்து சேதம் அடைந்துள்ளன.

Next Story