மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மீண்டும் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மீண்டும் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாலுகா முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. ஏற்கனவே நிவர், புரெவி ஆகிய புயல்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழக அரசின் இடுபொருள் இழப்பீட்டு தொகை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பாதிப்பிற்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் கதிர் வந்த நிலையில் இருந்த பயிர்கள், காய் கட்டிய நிலையிலும், முதிர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையிலும் இருந்த பயிர்கள் முற்றிலும் சாய்ந்து அழுக தொடங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிராமங்கள் தோறும் பொங்கல் விழா களையிழந்து விவசாயிகள் சோகத்தில் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
வேதாரண்யம் தாலுகாவில் ஆதனூர், கருப்பம்புலம், கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு, செட்டிப்புலம், பிராந்தியங்கரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் இழப்பீடு இறுதி செய்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story