பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்; கண்காணிப்பு அதிகாரி அறிவுரை


கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ பேசிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
x
கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ பேசிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
தினத்தந்தி 22 Jan 2021 3:12 AM GMT (Updated: 22 Jan 2021 3:12 AM GMT)

நீலகிரியில் பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.

ஆய்வுக் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்ததால் நீலகிரியில் தினமும் 10-க்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி வருகிறது. தினமும் ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அபராதம்
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் வருகை தரும் இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சித் துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கண்காணிப்பு
தமிழக அரசு உத்தரவின்படி எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நீலகிரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story