காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
பெண் தீக்குளிப்பு
காஞ்சீபுரம் ஓரிக்கை சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 34). இவரது மனைவி தீபா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், 1 வயதில் ஆண் குழந்தையும், 1 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் மனைவி தீபாவிடம் மாமனார் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வரக்கூறி ஆனந்த்ராஜ் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் மனமுடைந்த தீபா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் படுக்கை அறையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனால் பலத்த தீக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தீபாவை அடித்து துன்புறுத்தியதும், மனைவி தீபாவை தற்கொலைக்கு தூண்டியதும் உறுதியானதையடுத்து, ஆனந்த்ராஜை கைது செய்து அதைதொடர்ந்து அவரை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் இளம்பெண் சாவு தொடர்பாக காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. வித்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story